சீமைக் கருவேல மரம் என்றால் என்ன
சீமைக் கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் பரோ சோயிக் ஜூலி ஃப்ளோரா. இத்தாவரம் நாட்டு கருவேல மரத்தை ஒத்து இருப்பதாலும், வெளிநாட்டில் இருந்து வந்ததாலும் சீமைக் கருவேலம் என்று அழைக்கப்படுகிறது.
வயல்களின் ஓரங்களில் வேலிக்காக இம்மரங்கள் வளர்க்கப்பட்டதால் வேலிக்கருவேல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரத்தின் தாயகம் மெக்சிகோ, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா ஆகும்.
ஆனால் உலகில் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள 129 நாடுகளில் இத்தாவரம் காணப்படுகிறது.
காலப்போக்கில் சமையலுக்கான எரிபொருளாக இதன் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. எளிதில் பரவி வளரும் தன்மை கொண்ட இந்த சீமைக் கருவேல மரங்கள் விவசாயம் செய்வது குறைந்ததால் விளை நிலங்களிலும், முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்ட நீர்நிலைகளிலும் செழித்து வளர்ந்துள்ளது.
சீமைக் கருவேல மரத்தால் நிலத்தடி நீர் குறைவது எப்படி?
சீமைக்கருவேல மரங்கள் நிலத்தின் ஆழத்தில் ஊடுருவிச் சென்று நீரை உறிஞ்சி விடுவதால் அருகில் உள்ள ஏனைய தாவரங்களுக்கு நீர் கிடைக்க விடாமல் செய்து பிற தாவரங்களின் வளர்ச்சியை இது தடை செய்கிறது.
மழை இல்லாத காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால் காற்றில் ஈரப்பத அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது. மழை வாய்ப்பினையும் குறைத்து விடுகிறது. இத்தாவரத்தின் ஆணி வேர் மட்டுமல்லாமல் பக்க வேர்கள் வலிமையானவை. எனவே மழைநீர் நிலத்தை ஊடுருவிச் செல்வதை இம்மர வேர்கள் தடை செய்கின்றன.
இத்தாவரம் மற்ற தாவரங்களை விட அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது.