தாழையின் சிறப்புகள்
தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை கைதை எனவும் கூறுகிறார்கள். குறிஞ்சிப்பாட்டில் 83வது மலராகக் குறிப்பிடப்படும் கைதை, தாழையின் மலரான தாழம்பூ ஆகும். நம்புதாழை, வேதாழை, தாழையூத்து, பூந்தாழை, தாழைக்காடு, தாழையூர் என பல ஊர்கள் தாழையின் பெயரால் உருவாகியுள்ளன. இது நெய்தல் நிலத்திற்குரிய மரம் ஆகும். தாழம்பூ கைதகப் பூ என சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.
இலக்கியங்களில் தாழை
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தாழை குறிப்பிடப்படுகிறது. தலைவிரித்த பேய் போல தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்துள்ளதாக அகநானூறில் வெங்கண்ணனார் கூறுகிறார்.
நாரை கோதுகின்ற சிறகு போல, தாழையின் மொட்டுகள் விரிந்து மலர்வதாக குறுந்தொகையும், தாழம்பூ அன்னப்பறவை போல மலர்வதாக சிறுபாணாற்றுப்படையும் கூறுகின்றன.
இலையில் உள்ள முட்கள் சுறா மீனின் பற்கள் போலவும், சொரசொரப்பான தாழையின் அடிப்பகுதி இறால் மீனின் முதுகு போலவும், கூர்மையான முனை உள்ள இதன் மொட்டு யானையின் தந்தம் போலவும், மலர் முதிர்ந்து தலை சாய்த்து நிற்பது மான் தலை சாய்த்து நிற்பது போலவும், தாழம்பூ மலர்ந்து மணம் பரப்புவது, விழா நடைபெறும் இடத்தில் கமழும் தெய்வ மணம் போலவும் உள்ளதாக நற்றிணையில் நக்கண்ணையார் கூறுகிறார்.
சிவனின் முடியை பிரம்மா கண்டதாகக் கூறியதற்கு பொய்சாட்சியாக தாழம்பூ இருந்ததால் சாபம் பெற்று, அம்மலர் சிவவழிபாட்டிலிருந்து விலக்கப்பட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. பின் தாழம்பூவின் வேண்டுகோளை ஏற்று மகா சிவராத்திரி மூன்றாம் ஜாமப்பூஜையில் தாழம்பூ பயன்படுத்த சிவன் அருளினார். ஆனால் உத்தரகோசமங்கை கோயிலில் மட்டும் வழிபாட்டில் தாழம்பூ சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
பயன்கள்
மணமிக்க தாழம்பூ கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அம்மைநோய் கண்ட வீட்டில் தாழம்பூவைக் கட்டித் தொங்க விடுவதால் அக்கிருமிகள் அழிகின்றன. ஓலைச் சுவடிகளை பூச்சி அரிக்காமல் பாதுகாக்க இப்பூ பயன்படும். இதன் காயை அழகுக்காக விழாப்பந்தலில் கட்டித் தொங்கவிடுவர். இதன் விழுது வீட்டிற்கு வெள்ளையடிக்கவும், நார் ஊஞ்சலாடவும் பயன்படுகிறது. இதன் ஓலையில் இருந்து தாழைப்பாய் உருவாகிறது. தாழம்பூவில் இருந்து வாசனைத் தைலம் எடுக்கப்படுகிறது. இதன் வேர்க்கிழங்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பாதுகாக்க வேண்டும்
ஐவகை நிலங்களில் முல்லை, நெய்தல், பாலை நிலப்பகுதியாக விளங்கும் இம்மாவட்டத்தில் முள்மரங்கள் வளர்ந்து செழித்திருப்பதால், பாரம்பரிய நிலம் சார்ந்த மரங்கள் அழிந்து வருகின்றன. இதனால் இயல்பான இயற்கைச் சூழ்நிலை மாறிவருகிறது. தாழை மரங்களை கடற்கரைப் பகுதிகள் முழுவதும் அடர்த்தியாக வளர்த்து மண்ணரிப்பில் இருந்தும் கடல் சீற்றத்திலிருந்தும் இப்பகுதிகளை பாதுகாக்கவேண்டும்.